உமர் ஷரீஃப் — 203
9:100 (இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
9:101 இன்னும் உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது பிடிவாதமாக நிலைத்திருந்து அழிச்சாட்டியம் செய்கிறார்கள். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம்தான் அவர்களை அறிவோம். விரைவில் அவர்களை இருமுறை தண்டிப்போம். பிறகு, (மறுமையில் நரகத்தின்) பெரிய தண்டனையின் பக்கம் (அவர்கள்) மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.
9:102 இன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத) மற்றவர்கள் சிலரும் (மதீனாவிலும் அதைச் சுற்றிலும்) இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். நல்ல செயலையும் மற்ற (சில) கெட்ட செயலையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
9:103 (நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; இன்னும், (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
9:104 நிச்சயமாக, அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை (-அவர்கள் திருந்துவதையும் மன்னிப்புக் கோருவதையும்) ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், தர்மங்களை எடுக்கிறான்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?
9:105 (நபியே!) இன்னும், (போருக்கு வராமல் பின்தங்கிவிட்டு, பிறகு மன்னிப்பு கோரியவர்களிடம்) கூறுவீராக: “நீங்கள் (நல்ல அமல்களை அதிகம்) செய்யுங்கள். ஆக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். இன்னும், மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுமையில்) மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
9:106 இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒன்று, (அவர்கள் திருந்தவில்லை என்றால்) அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது, (அவர்கள் திருந்திவிட்டால்) அவன் அவர்களை மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.