உமர் ஷரீஃப் — 19
2:120 (நபியே!) யூதர்களும் கிறித்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்(றி அவர்களைப் போன்று நீர் மா)றும் வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். “அல்லாஹ் உடைய நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேர்வழியாகும். (ஆகவே, அதையே நான் பின்பற்றுவேன்)” எனக் கூறுவீராக. கல்வி ஞானம் உமக்கு வந்த பின்னர் அவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடம் உமக்கு பொறுப்பாளருமில்லை, உதவியாளருமில்லை.
2:121 (நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
2:122 இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக (அக்கால) உலக மக்களைவிட நான் உங்களை மேன்மையாக்கியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்.
2:123 இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது. இன்னும், அதனிடமிருந்து மீட்புத் தொகை (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. இன்னும், பரிந்துரை அதற்குப் பலனளிக்காது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
2:124 இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.”
2:125 இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.
2:126 இன்னும், இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வாயாக: “என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனி(வகை)களிலிருந்து உணவளி!” (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “எவர் நிராகரிப்பாரோ அவரை சிறிது (காலம்) சுகமனுபவிக்க வைப்பேன். பிறகு, நரக தண்டனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். இன்னும் அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.”