உமர் ஷரீஃப் — 189
9:14 அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை தண்டிப்பான்; இன்னும், அவர்களை இழிவுபடுத்துவான்; இன்னும், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான்; இன்னும், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள மனக் காயங்க)ளை குணப்படுத்துவான்.
9:15 இன்னும், அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தைப் போக்குவான்; இன்னும், அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர்களை திருத்தி, (அவர்களை) மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
9:16 (நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவர்கள் (மனம் விரும்பி) போர்புரிந்தார்களோ அவர்களையும்; இன்னும், அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய இவர்கள் அல்லாதவர்களை அந்தரங்க நண்பர்களாக எவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களையும் அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்கும் நிலையில், நீங்கள் (சோதிக்கப்படாமல்) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
9:17 அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு இணைவைப்பாளர்களுக்கு உரிமை இருக்கவில்லை. (அவர்களுடைய) நிராகரிப்பிற்கு அவர்களே சாட்சி கூறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய (நற்)செயல்கள் (இவ்வுலகிலேயே) அழிந்துவிடும். இன்னும், (மறுமையில்) நரகத்திலே அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
9:18 அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்கள்தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருப்பார்கள்.
9:19 ஹஜ் செய்பவர்களுக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் - அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று - நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
9:20 எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும், இவர்கள்தான் (சொர்க்கத்தைக் கொண்டு) வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.