>

உமர் ஷரீஃப் — 176

7:196 “நிச்சயமாக என் பாதுகாவலன் (இந்த) வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான். இன்னும், அவன் நல்லவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

7:197 இன்னும், அவனையன்றி நீங்கள் எவர்களிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய இயலமாட்டார்கள்; இன்னும், தங்களுக்கு தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.

7:198 இன்னும், (சிலை வணங்கிகளே!) நீங்கள் (வணங்குகிற) அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் (உங்கள் அழைப்பை) செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் (-அந்த சிலைகள்) உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். ஆனால், அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்.

7:199 (நபியே!) பெருந்தன்மையை (-மன்னிப்பை) பற்றிப் பிடிப்பீராக. இன்னும் நன்மையை ஏவுவீராக. இன்னும், அறியாதவர்களை புறக்கணிப்பீராக.

7:200 ஷைத்தானிடமிருந்து (மனக்) குழப்பம் (அல்லது கோபம்) உம்மைக் குழப்பினால் (உம்மை யாரும் கோபமூட்டினால்) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.

7:201 நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள், - ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (அல்லது கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூர்வார்கள்; அப்போது, அவர்கள் (தங்களுக்குரிய அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (-அந்த தீய எண்ணத்தை விட்டு விலகி, இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.)

7:202 அவர்களுடைய (வழிகெட்ட மனித) சகோதரர்கள் இருக்கிறார்களே, - அவர்களை (ஷைத்தான்கள்) வழிகேட்டில் அதிகப்படுத்துகிறார்கள். பிறகு அவர்கள் (-அந்த மனிதர்கள்) வழிகேட்டில் குறைவு செய்வதில்லை. (வழிகேட்டில் முன்னேறி கொண்டே இருப்பார்கள்.)

7:203 (அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் (உம் இறைவனிடம் கேட்டு) தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இவை, உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது (அல்லாஹ்வின்) நேர்வழியும், கருணையுமாகும்.

7:204 இன்னும், (தொழுகையில்) குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அதற்கு செவிதாழ்த்துங்கள்! இன்னும், வாய் மூடி அமைதியாக இருங்கள்!

7:205 (நபியே!) பணிந்தும், பயந்தும், சொல்லில் சப்தமின்றியும் காலையில் இன்னும் மாலையில் உம் இறைவனை உம் மனதில் நினைவு கூர்வீராக! கவனமற்றவர்களில் (-மறதியாளர்களில்) ஆகிவிடாதீர்!

7:206 நிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள (வான)வர்கள் அவனை வணங்குவதை விட்டு பெருமையடிப்பதில்லை; இன்னும், அவர்கள் அவனை துதிக்கிறார்கள்; இன்னும், அவனுக்கே சிரம் பணிகிறார்கள்.