>

உமர் ஷரீஃப் — 154

7:31 ஆதமின் சந்ததிகளே! மஸ்ஜிதுகளுக்கு செல்லும்போது உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் (- முழுமையான, சுத்தமான ஆடைகளை அணிந்து தொழுகைக்கு செல்லுங்கள்)! இன்னும், (அனுமதிக்கப்பட்டதை மட்டும்) புசியுங்கள்; பருகுங்கள். ஆனால், விரயம் செய்யாதீர்கள் (அனுமதிக்கப்பட்டதை உண்பதிலும் எல்லை மீறாதீர்கள்)! (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்.

7:32 (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் யார் தடைசெய்தார்?” “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும். மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும் அது) பிரத்தியேகமாக இருக்கும்” என்று கூறுவீராக. புரிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.

7:33 (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு நீங்கள் இணையாக்குவதையும் மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).”

7:34 இன்னும், எல்லா இனத்தவருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்) ஒரு தவணையுண்டு. அவர்களது (முடிவுக்குரிய) தவணை வந்தால் ஒரு வினாடி பிந்த மாட்டார்கள்; இன்னும், (ஒரு வினாடி) முந்த மாட்டார்கள்.

7:35 ஆதமின் சந்ததிகளே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் என் வசனங்களை உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால், (அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் அவர்கள் கொண்டு வந்ததை பின்பற்றுங்கள்!) எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ, இன்னும், (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

7:36 இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

7:37 ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட; அல்லது, அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? விதியில் (எழுதப்பட்ட தண்டனையில்) இவர்களுடைய பாகம் இவர்களை வந்தடையும். இறுதியாக, இவர்களை உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்) தூதர்கள் இவர்களிடம் வந்தால், “அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று கூறுவார்கள். “அவர்கள் எங்களை விட்டு மறைந்துவிட்டனர்” என்று (அந்த இணைவைப்பாளர்கள் பதில்) கூறுவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாக(வே) இருந்தனர் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சியளிப்பார்கள்.