உமர் ஷரீஃப் — 145
6:131 அதற்குக் காரணமாவது, நகரங்களை, - அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்கும் நிலையில் (அவர்களுடைய ஷிர்க் எனும்) - அநியாயத்தினால் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை.
6:132 இன்னும், எல்லோருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை.
6:133 இன்னும், (நபியே!) உம் இறைவன் நிறைவானவன் (-எத்தேவையுமற்றவன்), கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் அவன் தான் நாடியவர்களை உருவாக்குவான்.
6:134 நிச்சயமாக எதை நீங்கள் வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வரக்கூடியதே. இன்னும், நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை. (அவனை விட்டும் நீங்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.)
6:135 (நபியே!) கூறுவீராக: “என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள் விரும்புவதை) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி அவன் ஏவியதை) செய்கிறேன். ஆக, மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.’’
6:136 இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும்.
6:137 இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வணக்க வழிபாட்டை குழப்புவதற்காகவும் அவர்களின் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதுடன் விட்டுவிடுங்கள்.