உமர் ஷரீஃப் — 133
6:45 ஆக, அநியாயமிழைத்த கூட்டத்தின் வேர் அறுக்கப்பட்டது. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்!
6:46 “அல்லாஹ், உங்கள் செவித் திறனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; இன்னும், உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் யார் இருக்கிறார், அவர் அவற்றை உங்களுக்கு (திரும்ப)க் கொண்டு வருவாரா என்பதை அறிவியுங்கள்?’’ என்று (நபியே!) கூறுவீராக. (இன்னும், நபியே!) நாம் அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. (இவ்வளவு தெளிவாக விவரித்த) பிறகும், அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
6:47 (நபியே!) கூறுவீராக: “திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் தண்டனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (யாரும்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!’’
6:48 நற்செய்தியாளர்களாக, எச்சரிப்பவர்களாகவே தவிர தூதர்களை நாம் அனுப்புவதில்லை. ஆகவே, எவர்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு (நல்லமல்களை செய்து தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை. இன்னும், அவர்கள் கவலைப் படமாட்டார்கள்.
6:49 இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனை அவர்களை வந்தடையும்.
6:50 (நபியே!) கூறுவீராக: ”அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றமாட்டேன்.’’ (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?’’
6:51 இன்னும், (நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை’’ என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகுவதற்காகவும்).
6:52 இன்னும், (நபியே!) தங்கள் இறைவனை - அவனின் முகத்தை நாடியவர்களாக - காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை (உங்கள் சபையிலிருந்து) விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே. (உமது செயல்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் செயல்களைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.)