உமர் ஷரீஃப் — 115
5:42 (அவர்கள்) பொய்(யான செய்தி)களுக்குத்தான் அதிகம் செவிசாய்க்கிறார்கள்; தவறான (-பாவமான) வருமானத்தை அதிகம் விழுங்குகிறார்கள். ஆக, (நபியே) அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக; அல்லது, அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. இன்னும், நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோர் மீது அன்பு வைக்கிறான்.
5:43 (நபியே! அவர்கள்) உம்மை எவ்வாறு நீதிபதியாக - தீர்ப்பளிப்பவராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில், அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. (உம்மிடம் வந்த) பிறகு, அதற்கு பின்னர் (உமது சட்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால்) அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை.
5:44 நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். இன்னும், குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களும் அதன் மூலமே தீர்ப்பளிப்பார்கள். ஆக, (பண்டிதர்களே!) மக்களை அஞ்சாதீர்கள்; என்னை அஞ்சுங்கள். இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதன் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.
5:45 இன்னும், அவர்கள் மீது அ(ந்த தவ்ராத்)தில் சட்டமாக விதித்தோம்: “நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் (ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்திய) காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” ஆக, எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்!