>

உமர் ஷரீஃப் — 602

106:1 குறைஷிகள் பழக்கப்படுத்திக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!

106:2 குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் பழக்கப்படுத்திக் கொண்(டு அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்)டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!

106:3 ஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.

106:4 அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான்.

107:1 (நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?

107:2 ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)

107:3 இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்.

107:4 ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,

107:5 அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

107:6 அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்.

107:7 இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்.

108:1 (நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்.

108:2 ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!

108:3 நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).