உமர் ஷரீஃப் — 585
80:1 (நபி முகம் சுளித்து) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,
80:2 அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.
80:3 (நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா?
80:4 அல்லது (உம்மிடம்) அவர் அறிவுரை பெறுவார். ஆக, (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம் அல்லவா? (அப்படி இருக்க நீர் அவரை விட்டு எப்படி முகம் திருப்பினீர்?)
80:5 ஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ,
80:6 நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர்.
80:7 அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை.
80:8 ஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ,
80:9 அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,
80:10 ஆக, அவரை நீர் அலட்சியப்படுத்துகிறீர்.
80:11 அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும்.
80:12 ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.
80:13 (இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில்,
80:14 உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது.
80:15 அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
80:16 அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள்.
80:17 (ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
80:18 எந்தப் பொருளிலிருந்து அல்லாஹ் அவனைப் படைத்தான்?
80:19 விந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
80:20 பிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான்.
80:21 பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான்.
80:22 பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
80:23 அவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
80:24 ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்!
80:25 நிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம்.
80:26 பிறகு, பூமியைப் பிளந்தோம்.
80:27 ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.
80:28 இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும்,
80:29 ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும்,
80:30 அடர்ந்த தோட்டங்களையும்,
80:31 பழங்களையும், புற்பூண்டுகளையும்,
80:32 உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)?
80:33 ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,
80:34 அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.
80:35 இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும்,
80:36 இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).
80:37 அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும்.
80:38 அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,
80:39 சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.
80:40 இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும்.