>

உமர் ஷரீஃப் — 580

76:26 இன்னும், இரவில் அவனுக்காக சிரம் பணிந்து (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) தொழுவீராக! இன்னும், நீண்ட நேரம் (உபரியான தொழுகைகள் மூலம்) அவனை தொழுது வணங்குவீராக!

76:27 நிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள். இன்னும், அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகிறார்கள்.

76:28 நாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்ற மனிதர்களை (ஆனால், அமல்களால் அவர்களுக்கு மாற்றமானவர்களை அவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம்.

76:29 நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆக, யார் (வெற்றி பெற) நாடுகிறாரோ அவர் தனது இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.

76:30 அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் நாடமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

76:31 அவன் யாரை நாடுகிறானோ அவரை தனது அருளில் அவன் பிரவேசிக்க வைக்கிறான். அநியாயக்காரர்கள் - துன்புறுத்தும் தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான்.

77:1 தொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!

77:2 அதிவேகமாக வீசுகிற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

77:3 (மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!

77:4 (உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடிய அத்தாட்சிகள் மீது சத்தியமாக!

77:5 (நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!

77:6 (அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)!

77:7 நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.

77:8 ஆக, நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,

77:9 இன்னும், வானம் பிளக்கப்படும்போது,

77:10 இன்னும், மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது,

77:11 இன்னும், தூதர்கள் (மறுமையில் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்வதற்காக) நேரம் குறிக்கப்படும்போது,

77:12 எந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?

77:13 (ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் நேரம் குறிக்கப்பட்டுள்ளார்கள்).

77:14 தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

77:15 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

77:16 (நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

77:17 பிறகு, (அவர்களுக்கு பின்னர் வந்த நிராகரிப்பாளர்களான) பின்னோர்கள் (நிராகரிப்பிலும் பிறகு தண்டனை அனுபவிப்பதிலும்) அவர்(களின் முன்னோர்)களை பின்தொடரும்படி செய்தோம்.

77:18 இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.

77:19 பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!