உமர் ஷரீஃப் — 58
3:62 நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறாகும். (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் இல்லை, அல்லாஹ்வைத் தவிர. இன்னும் நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
3:63 ஆக, (அவர்கள் இந்த உண்மை வரலாற்றை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் (அத்தகையை) விஷமிகளை நன்கறிந்தவன் ஆவான்.
3:64 (நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.
3:65 வேதக்காரர்களே! இப்ராஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்ராத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. ஆக, (உண்மை இவ்வளவு தெளிவாக இருந்தும்) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
3:66 (முன்பு) நீங்களோ உங்களுக்கு எதில் (கொஞ்சம்) அறிவிருந்ததோ அதில் தர்க்கம் செய்தீர்கள். ஆக, உங்களுக்கு எதில் அறவே அறிவில்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
3:67 இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறித்தவராகவும் இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் கட்டளையை உறுதியாக பின்பற்றுபவராக (-ஏகத்துவத்தில் மிக உறுதியுடையவராக), முஸ்லிமாக (-அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்தவராக) இருந்தார். இன்னும், இணைவைப்பவர்களில் அவர் இருக்கவில்லை.
3:68 நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இந்த நபியை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் (இன்னும், உதவியாளன்) ஆவான்.
3:69 (நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்களில் ஒரு கூட்டம் உங்களை வழிகெடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. அவர்கள் தங்களைத் தாமே தவிர (உங்களை) வழிகெடுக்க முடியாது. இன்னும், (இதை) அவர்கள் உணரமாட்டார்கள்.
3:70 வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? (நபியின் உண்மைத் தன்மைக்கு) நீங்களே சாட்சியளிக்கிறீர்கள்.