>

உமர் ஷரீஃப் — 57

3:53 “எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். இன்னும், இந்தத் தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும் சாட்சியாளர்களாக) பதிவு செய்!’’ (என்று அவர்கள் பிரார்த்தித்தனர்).

3:54 அவர்கள் (-யூதர்கள்) சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். அல்லாஹ்வோ, சதி செய்பவர்களில் மிக மேலானவன்.

3:55 “ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மை (நபியாக ஏற்று) பின்பற்றியவர்களை இறுதிநாள் வரை (உமது நபித்துவத்தை) நிராகரித்தவர்களுக்கு மேலாக ஆக்குவேன்” என அல்லாஹ் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக! (நிராகரிப்பாளர்களே!) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (ஈஸாவின் விஷயத்தில்) நீங்கள் கருத்து வேறுபாடு செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் நான் தீர்ப்பளிப்பேன்.

3:56 ஆக, எவர்கள் (உமது நபித்துவத்தை) நிராகரித்தார்களோ (இன்னும், உமக்கு தகுதி இல்லாததை உம்முடன் இணைத்து பேசினார்களோ) அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடினமான தண்டனையால் நான் தண்டிப்பேன். அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இருக்க மாட்டார்.

3:57 ஆக எவர்கள் (உம்மை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அப்படி) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களின் (நற்)கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.

3:58 (நபியே!) நாம் உமக்கு ஓதிக் காண்பித்த (ஈஸாவைப் பற்றிய உண்மையான சரித்திரங்களாகிய) அவை (அனைத்தும் உமது நபித்துவத்தின்) அத்தாட்சிகளிலிருந்தும் ஞானமிகுந்த (குர்ஆன் என்னும்) அறிவுரையிலிருந்தும் உள்ளவை ஆகும்.

3:59 நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் உவமை ஆதமுடைய உவமையைப் போன்றாகும். அவரை மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ‘ஆகு’ என்று அவரை நோக்கி கூறினான். (உடனே அவர் மனிதனாக) ஆகிவிட்டார்.

3:60 (நபியே! ஈஸாவைப் பற்றிய இந்த) உண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். ஆகவே, (இதை) சந்தேகிப்பவர்களில் நீர் ஆகிவிடாதீர்.

3:61 ஆக, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். பிறகு, (அனைவரும் ஒன்றுகூடி) மிகுந்த பயத்தோடும் பணிவோடும் மன்றாடி பிரார்த்திப்போம். இன்னும், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்.’’