உமர் ஷரீஃப் — 566
68:43 அவர்களின் பார்வைகள் தாழ்ந்தவையாக இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலக வாழ்க்கையில்,) சுகமானவர்களாக இருந்தபோது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)
68:44 ஆக, என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்கு சூழ்ச்சி செய்வோம் (-கொஞ்சம் சுகம் கொடுத்து திடீரென தண்டிப்போம்).
68:45 இன்னும், அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக உறுதியானது.
68:46 (நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கிறீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?
68:47 அவர்களிடம் மறைவானவை இருக்கிறதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை, அதாவது, முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல) அவர்கள் (அதில்) எழுதுகிறார்களா?
68:48 ஆக, (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர் - அவரோ கடும் துயரத்தில் மூழ்கியவராக இருக்கும் நிலையில் (தனது இறைவனை) அழைத்த நேரத்தில் (அவர் அவசரப்பட்டது போன்று அவசரப்பட்டு விடாதீர்! அவர் கோபப்பட்டது போன்று கோபப்பட்டு விடாதீர்)!
68:49 அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான, ஆபத்தான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராக இருந்தார்.
68:50 ஆக, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். ஆக, அவரை நல்லவர்களில் ஆக்கினான்.
68:51 நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை (உம்மிடமிருந்து அவர்கள்) செவியுற்றபோது. இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்” என்று.
68:52 (குர்ஆனாகிய) இது, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர இல்லை.
69:1 உண்மையான நிகழ்வு!
69:2 உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
69:3 உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?
69:4 ஸமூது சமுதாயமும் ஆது சமுதாயமும் (உள்ளங்களை) தட்டக்கூடிய (திடுக்கிட செய்கின்ற) மறுமை நாளை பொய்ப்பித்தனர்.
69:5 ஆக, ஸமூது சமுதாயம் அளவு கடந்த சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:6 ஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
69:7 அவன், அதை (-அந்த காற்றை) ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள் மீது தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆக, அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர். அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீச்ச மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் இருந்தனர்.
69:8 ஆக, அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா?