உமர் ஷரீஃப் — 564
67:27 ஆக, அவர்கள் அ(ந்த மறுமை நிகழ்வ)தை மிக சமீபமாக பார்க்கிறபோது நிராகரித்தவர்களின் முகங்கள் இழிவுக்குள்ளாகி விடும். இன்னும், நீங்கள் எதை தேடி கொண்டிருந்தீர்களோ அ(ந்த மறுமை நாளான)து இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.
67:28 (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் மரணிக்க செய்து விட்டால்; அல்லது, அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் உயிரோடு வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) ஆக, துன்புறுத்தும் தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை அல்லாஹ்வின் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள்.
67:29 (நபியே!) கூறுவீராக! “அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன், மகா கருணையாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இன்னும், அவன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். ஆக, தெளிவான வழிகேட்டில் யார் இருக்கிறார் என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்.
67:30 (நபியே!) கூறுவீராக! “உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் எடுக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை (எங்களுக்கு) அறிவியுங்கள்.”
68:1 நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
68:2 (நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
68:3 நிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு.
68:4 நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.
68:5 ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,
68:6 உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று.
68:7 நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து யார் வழிதவறினானோ அவனை மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்.
68:8 ஆக, (நபியே! உம்மையும் உமது மார்க்கத்தையும்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
68:9 நீர் (அவர்களுடன்) அனுசரித்து மென்மையாக போகவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரித்து மென்மையாக நடப்பார்கள்.
68:10 அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
68:11 அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
68:12 நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
68:13 அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
68:14 செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
68:15 அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான்.
68:16 (அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.