>

உமர் ஷரீஃப் — 551

60:12 நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;) நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

60:13 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசி(த்து உங்கள் நண்பர்களாக ஆ)க்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்.

61:1 வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

61:2 நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்?

61:3 நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் (செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியதாக இருக்கிறது.

61:4 நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய பாதையில் வரிசையாக நின்று போர் புரிபவர்களை விரும்புகிறான். அவர்களோ, (கற்கள் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக வைத்து கட்டப்பட்ட) உறுதியான கட்டிடத்தைப் போல் இருக்கிறார்கள்.

61:5 இன்னும், மூஸா தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் மக்களே! எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்பதை திட்டமாக நீங்கள் அறிவீர்கள்.” அவர்கள் (நேர்வழியில் இருந்து) விலகி வழிகேட்டில் சென்றபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை (நேர்வழியில் இருந்து) திருப்பி வழிகேட்டில் விட்டுவிட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.