உமர் ஷரீஃப் — 54
3:30 ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் (தனக்கு முன்) சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ், தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுள்ளவன் ஆவான்.
3:31 (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’
3:32 (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.’’
3:33 நிச்சயமாக அல்லாஹ், ஆதமையும் நூஹையும் இப்ராஹீமின் குடும்பத்தையும் இம்ரானின் குடும்பத்தையும் அகிலத்தார்களைவிட (தனது தூதுத்துவத்துக்காக) தேர்ந்தெடுத்தான்.
3:34 ஒரு (சிறந்த) சந்ததியை (அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்). அதில் சிலர், சிலரைச் சேர்ந்தவர். (அவர்கள் அனைவரின் கொள்கையும் ஒன்றே.) அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
3:35 (நபியே!) இம்ரானுடைய மனைவி, “என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ள(குழந்)தை(யை இறையாலயத்தில் உன்னை வணங்க) அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன். ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
3:36 ஆக, (இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது, “என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிக அறிந்தவன். (இந்த) பெண்ணைப் போன்று (அந்த) ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!’’ எனக் கூறினாள்.
3:37 ஆகவே, அவளுடைய இறைவன் அவளை (அன்போடு) அழகாக அங்கீகரித்தான். இன்னும், அழகியமுறையில் அவளை வளரச் செய்தான். இன்னும், ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். (அவள் தங்கி இருந்த) மாடத்தில் ஸகரிய்யா அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் கண்டார். “மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?’’ எனக் கூறினார். “இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள்.