உமர் ஷரீஃப் — 509
47:20 (இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஆக, (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) பற்றி கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ள (நய)வ(ஞ்சக)ர்கள் மயக்கமுற்றவர்கள் பார்ப்பதுபோல் மரண பயத்தால் உம் பக்கம் பார்ப்பார்கள். ஆக, அவர்களுக்குக் கேடுதான்.
47:21 (போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் வெளிப்படையான செயலாக இருந்தது). ஆக, (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டபோது (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்திருக்கும்.
47:22 (அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் விலகிவிட்டால் பூமியில் குழப்பம் செய்வீர்கள்தானே! உங்கள் இரத்த உறவுகளை துண்டித்து விடுவீர்கள்தானே!
47:23 அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை சபித்தான். ஆக, அவர்களை அவன் செவிடாக்கி விட்டான்; அவர்களின் பார்வைகளை குருடாக்கி விட்டான்.
47:24 ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
47:25 (முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றார்களோ அவர்களுக்கு ஷைத்தான் (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். இன்னும், அல்லாஹ் அவர்களுக்கு (சிறிது காலம் வரை இந்த உலகத்தில்) அவகாசம் கொடுத்துள்ளான்.
47:26 இது ஏனெனில், நிச்சயமாக (வேதக்காரர்களாகிய) இவர்கள் அல்லாஹ் இறக்கியதை வெறுத்தவர்களிடம் (-நயவஞ்சகர்களிடம்), “சில விஷயங்களில் உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். இவர்கள் (தங்களுக்குள்) பேசுவதை அல்லாஹ் நன்கறிவான்.
47:27 ஆக, அவன் எப்படி அறியாமல் இருப்பான்! வானவர்கள் அவர்களை உயிர் வாங்கும் போது அவர்களின் முகங்களிலும் அவர்களின் பின் புறங்களிலும் அடிப்பார்கள்.
47:28 இ(ப்படி வானவர்கள் அடிப்ப)து ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு எது கோபமூட்டுமோ அதை பின்பற்றி நடந்தார்கள். இன்னும், அவனது பொருத்த(த்திற்குரிய இஸ்லாமிய மார்க்க)த்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
47:29 தங்களது உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் எண்ணிக் கொண்டார்களா, “அல்லாஹ் அவர்களின் (உள்ளங்களில் உள்ள) குரோதங்களை (நம்பிக்கையாளர்களுக்கு) வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான்?” என்று.