>

உமர் ஷரீஃப் — 502

45:33 இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் (-தண்டனைகள்) அவர்களுக்கு வெளிப்படும். இன்னும், அவர்கள் எ(ந்த நரகத்)தை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த நரகமான)து அவர்களை சூழ்ந்துகொள்ளும்.

45:34 இன்னும், (அவர்களை நோக்கி) கூறப்படும்: “இன்று நாங்கள் உங்களை (தண்டனையில்) விட்டுவிடுவோம், நீங்கள் உங்களது இன்றைய தினத்தின் சந்திப்பை (மறந்து அதற்கு அமல் செய்வதை) நீங்கள் விட்டுவிட்டது போன்று. உங்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இல்லை.”

45:35 இதற்குக் காரணம், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இன்னும், உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும், அவர்கள் மன்னிப்பு கோருவதற்காக உலகத்திற்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள்.

45:36 ஆக, எல்லாப் புகழும் வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, அகிலத்தார்களின் அதிபதி அல்லாஹ்விற்கே உரியதாகும்.

45:37 இன்னும், வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.

46:1 ஹா மீம்.

46:2 மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டதாகும்.

46:3 வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள், எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள்.

46:4 (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) அழைப்பவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காண்பியுங்கள்? அல்லது, வானங்க(ளையும் வானங்க)ளில் (உள்ள படைப்புகளை படைத்ததிலும்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை; அல்லது, (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள், நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் (ஆதாரத்தைக் காட்டுங்கள்!).”

46:5 அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைப்பவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ மறுமை நாள் வரை இவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இன்னும், இவர்களின் அழைப்பை அவர்கள் அறியவும் மாட்டார்கள்.