உமர் ஷரீஃப் — 473
40:50 (அந்த காவலாளிகள்) கூறுவார்கள்: “தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா?” அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “ஏன் இல்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.)” அவர்கள் கூறுவார்கள்: “(உங்கள் அனைவருக்காகவும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்!” காஃபிர்கள் – நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை (எந்த பலனுமளிக்காது. ஏனெனில், அவர்களின் பிரார்த்தனை) வீணான வழிகேட்டில்தான் இருக்கிறது.
40:51 நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.
40:52 அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தங்கள் தெரிவிப்பது பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் உண்டாகும். இன்னும், அவர்களுக்கு (தங்குமிடம் தண்டனைகள் நிறைந்த நரகமாகிய) கெட்ட இல்லமாகும்.
40:53 திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளை அந்த வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம்.
40:54 (அந்த வேதம்) நேர்வழிகாட்டியும் நிறைவான அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமும் ஆகும்.
40:55 ஆக, (சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! இன்னும், உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக! இன்னும், மாலையிலும் காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!
40:56 நிச்சயமாக எவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமல் இருக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்களோ, அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
40:57 மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பதுதான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (எல்லா படைப்புகளையும் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறியமாட்டார்கள்.
40:58 குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.