உமர் ஷரீஃப் — 444
36:55 நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (தங்களுக்கு சுகமளிக்கும்) வேளையில் இன்புற்றவர்களாக இருப்பார்கள்.
36:56 அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் கட்டில்கள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:57 அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும், அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.
36:58 (உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும் என்று மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து கூறப்படும்.
36:59 குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!
36:60 ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.
36:61 இன்னும், நிச்சயமாக என்னை வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்.
36:62 இன்னும், அவன் உங்களில் அதிகமான மக்களை திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருக்கவில்லையா?
36:63 இதுதான் நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகமாகும்.
36:64 இன்று அதில் நீங்கள் எரிந்து பொசுங்குங்கள், நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.
36:65 இன்று நாம் அவர்களின் வாய்கள் மீது முத்திரையிடுவோம். இன்னும், அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.
36:66 நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். ஆக, அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்!
36:67 நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்து (அவர்களை உருமாற்றி அழித்து) இருப்போம். ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (பின்னால்) திரும்பி வரவும் மாட்டார்கள்.
36:68 நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கிறோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
36:69 நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறில்லை.
36:70 (உள்ளத்தால்) உயிருள்ளவராக இருப்பவரை அது எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்).