>

உமர் ஷரீஃப் — 432

34:32 பெருமை அடித்த (தலை)வர்கள் (தங்களைப் பின்பற்றி வழிகெட்ட) பலவீனர்களுக்கு கூறுவார்கள்: “நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களைத் தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பெரும் பாவிகளாக) இருந்தீர்கள்.”

34:33 பலவீனர்கள் பெருமை அடித்தவர்களுக்குக் கூறுவார்கள்: மாறாக, (இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் எங்களுக்கு) செய்த சூழ்ச்சியாகும். நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணை (தெய்வங்)களை நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் (அனைவரும்) தண்டனையை கண்ணால் காணும்போது துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துகளில் சங்கிலி விலங்குகளை நாம் ஆக்குவோம். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?

34:34 ஓர் ஊரில் (அந்த ஊர் மக்களை) எச்சரிக்கை செய்கின்ற தூதரை நாம் அனுப்பினால், அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம் என்று (அவர்களிடம்) கூறாமல் இருக்க மாட்டார்கள். (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கிறார்கள்.)

34:35 இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் (உங்களை விட இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது எங்கள் மீது இவ்வுலகில் இறைவன் செய்த அருள்.) ஆகவே, நாங்கள் (மறுமையிலும்) அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.”

34:36 (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகத் தருகிறான். இன்னும், (அவன் நாடுபவர்களுக்கு) சுருக்கி கொடுக்கிறான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதன் தத்துவத்தை) அறியமாட்டார்கள்.

34:37 உங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. இன்னும், அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.

34:38 எவர்கள் நமது வசனங்களில் (அவற்றைப் பொய்ப்பித்து, நம்மை) பலவீனப்படுத்த முயல்வார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்கு கொண்டுவரப்படுவார்கள்.

34:39 (நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (சிறந்த) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்.