உமர் ஷரீஃப் — 384
27:77 நிச்சயமாக இ(ந்த வேதமான)து நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்.
27:78 நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன் ஆவான்.
27:79 ஆக, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கிறீர்.
27:80 நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் - அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால் - (இந்த ஏகத்துவ) அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது.
27:81 இன்னும், (அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்கள் ஆவார்கள்.
27:82 அவர்கள் மீது (இனி அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற) நமது வாக்கு உறுதியாக நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளை உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்” என்று அவர்களிடம் அது பேசும்.
27:83 இன்னும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகிற நாளை நினைவு கூர்வீராக! ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் (மஹ்ஷர் மைதானத்தில்) தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
27:84 இறுதியாக, அவர்கள் (எல்லோரும் மறுமையில் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம்) வந்து விடும்போது (அல்லாஹ்) கூறுவான்: “எனது அத்தாட்சிகளை - அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்கும் நிலையில் - நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அல்லது, நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”
27:85 இன்னும், அவர்கள் (இம்மையில்) செய்த தீமைகளால் (அல்லாஹ்வின் தண்டனையின்) கூற்று அவர்கள் மீது (மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் (விசாரணையின் போது எதிர்த்து) பதில் பேசமாட்டார்கள்.
27:86 நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் அமைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
27:87 இன்னும், எக்காளத்தில் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் (-பயத்தால் நடுங்கி) திடுக்கிடுவார்கள். ஆனால், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. (போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது.) இன்னும், எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
27:88 (நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று சென்றுகொண்டிருக்கும். (இது,) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.