உமர் ஷரீஃப் — 362
25:21 இன்னும், நமது சந்திப்பை ஆசை வைக்காதவர்கள் கூறினார்கள்: “எங்களிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது, நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டுமே?” திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் கர்வம் கொண்டனர். இன்னும், மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்.
25:22 அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும், (வானவர்கள்) கூறுவார்கள்: “நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.”
25:23 (அல்லாஹ்வை நிராகரித்த) அவர்கள் செய்த (நற்) செயல்களை நாம் (அவற்றுக்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். ஆக, அவற்றை பரத்தப்பட்ட புழுதியாக (நன்மைகள் இல்லாமல்) ஆக்கிவிடுவோம்.
25:24 சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் மிக சிறந்தவர்கள்; இன்னும், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள் ஆவார்கள்.
25:25 இன்னும், வானம் பிளந்து, வெண் மேகம் வெளிப்படும் நாளில்; இன்னும், வானவர்கள் (மஹ்ஷர் மைதானத்திற்கு) இறக்கப்படும் நாளில்,
25:26 உண்மையான (உறுதியான) ஆட்சி அந்நாளில் ரஹ்மானிற்கே உரியது. இன்னும், அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு மிக சிரமமான நாளாக இருக்கும்.
25:27 இன்னும், அந்நாளில் அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் (எனக்கு) ஒரு (நல்ல) வழியை ஏற்படுத்தி (அவரை பின்பற்றி) இருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
25:28 “எனது நாசமே! (என் வழிகேட்டுக்கு காரணமாக இருந்த) இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!”
25:29 (குர்ஆன் எனும்) அறிவுரை என்னிடம் வந்த பின்னர் (அதை பின்பற்றவிடாமல்) அதிலிருந்து என்னை அவன் திட்டவட்டமாக வழிகெடுத்து விட்டான். இன்னும், (மறுமையில்) ஷைத்தான் மனிதனை கைவிடுபவனாக இருக்கிறான்.
25:30 இன்னும், (மறுமையில் நமது) தூதர் கூறுவார்: “என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாக எடுத்துக்கொண்டனர்.”
25:31 (நபியே! நீர் எதிரிகளால் சிரமப்படுகின்ற) இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளில் இருந்து எதிரிகளை நாம் ஆக்கினோம். (உமக்கு) நேர்வழி காட்டுவதற்கும் (உமக்கு) உதவுவதற்கும் உமது இறைவனே போதுமானவன் ஆவான்.
25:32 நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இவர் (-இந்த தூதர்) மீது இந்த குர்ஆன் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா!” இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். அது) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆகும். இன்னும், இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதிகாண்பித்து அதன் விளக்கத்தையும்) கற்பித்(து கொடுத்)தோம்.