>

உமர் ஷரீஃப் — 321

20:126 (அல்லாஹ்) கூறுவான்: “(உனது நிலை) அவ்வாறுதான். (ஏனெனில்,) எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆக, நீ அவற்றை (பின்பற்றாது) விட்டுவிட்டாய். அவ்வாறே இன்று நீ (நரகத்தில் கடும் தண்டனையை அனுபவிப்பவனாக) விட்டுவிடப்படுவாய்.”

20:127 இன்னும், யார் வரம்பு மீறுவாரோ; தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும்.

20:128 ஆக, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் (தங்கள் பயணத்தில் அழிவுக்குள்ளான) அவர்களின் இருப்பிடங்களில் செல்கிறார்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.

20:129 (ஆதாரத்தை நிலை நிறுத்தாமல் அல்லாஹ் யாரையும் தண்டிக்கமாட்டான் என்ற) வாக்கும் (தண்டனை இறங்குவதற்கு என்று) ஒரு குறிப்பிட்ட தவணையும் உமது இறைவனிடம் முன்னரே முடிவாகி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (எல்லை மீறியவர்களுக்கு) அழிவு உடனே ஏற்பட்டிருக்கும்.

20:130 ஆக, (நபியே!) அவர்கள் கூறுவதை நீர் (பொறுமையுடன்) சகி(த்திரு)ப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் அது மறைவதற்கு முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் உமக்கு கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!

20:131 இன்னும், இ(ணைவைப்ப)வர்களில் (இவர்களைப்) போன்ற பலருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் கொடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். நாம் அவர்களை அதில் சோதிப்பதற்காக (கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடை (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்.

20:132 இன்னும், உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! இன்னும், அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! நாம் (உமக்கோ மற்றவர்களுக்கோ நீர்) உணவளிக்கும்படி உம்மிடம் கேட்கவில்லை. நாமே உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்.

20:133 “இவர் தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா?” என்று (இணைவைப்பவர்கள்) கூறுகிறார்கள். முந்திய வேதங்களில் உள்ளதை தெளிவுப்படுத்தும் (-குர்ஆன் என்னும்) உறுதியான சான்று அவர்களிடம் வரவில்லையா?

20:134 இன்னும், இதற்கு முன்னரே ஒரு தண்டனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறி இருப்பார்கள்.

20:135 (நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் (உங்கள் முடிவை) எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, (இப்போதும் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள். சமமான (நேரான) பாதை உடையவர்கள் யார்? இன்னும், நேர்வழி பெற்றவர்கள் யார் என்பதை (உங்கள் மரணத்தின்போது) நீங்கள் விரைவில் அறிவீர்கள்.