உமர் ஷரீஃப் — 298
18:35 அவனோ (இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் (பெருமையோடு) நுழைந்தான். இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை என்று கூறினான்.
18:36 இன்னும், “மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த (இடத்)தை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் நான் பெறுவேன்.”
18:37 அவரது தோழர், - அவரோ அவனிடம் பேசியவராக - அவனுக்கு கூறினார்: “உன்னை (உன் மூல தந்தை ஆதமை) மண்ணிலிருந்தும், பிறகு (உன்னை) இந்திரியத்திலிருந்தும் படைத்து; பிறகு, உன்னை ஓர் ஆடவராக சீரமைத்தானே அப்படிப்பட்ட (இறை)வனை நீ நிராகரிக்கிறாயா?
18:38 எனினும், நான் அவ்வாறு செய்யமாட்டேன். அல்லாஹ்வாகிய அவன்தான் என் இறைவன். என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.”
18:39 மேலும், உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது, “இது அல்லாஹ் நாடி (எனக்கு) கிடைத்தது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர (நமக்கு) அறவே ஆற்றல் இல்லை” என்று நீ கூறியிருக்க வேண்டாமா? நான் உன்னைவிட செல்வத்திலும் சந்ததியிலும் குறைந்தவனாக இருப்பதாக என்னை நீ பார்த்தால்,
18:40 ஆக, உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தரக்கூடும். இன்னும் அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது வானத்திலிருந்து அழிவை (இரவில்) அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக காலையில் ஆகிவிடும்.
18:41 “அல்லது, அதன் தண்ணீர் (பூமியின்) ஆழத்தில் சென்று விடக் கூடும். ஆகவே, அதைத் தேடி (மேலே) கொண்டு வருவதற்கு அறவே நீ இயலமாட்டாய்.”
18:42 இன்னும், அவனுடைய கனிகள் (இதர செல்வங்கள்) எல்லாம் அழிந்தன. ஆக, தான் அதில் செலவழித்ததின் மீது (வருத்தப்பட்டு) தன் இரு கைகளையும் அவன் புரட்ட ஆரம்பித்தான். இன்னும், அதன் செடி கொடிகளை விட்டு அ(வனது தோட்டமான)து வெறுமையாகி விட்டது. மேலும், அவன் (மறுமையில்) கூறுவான்: “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”
18:43 மேலும், அல்லாஹ்வை அன்றி அவனுக்கு உதவுகிற கூட்டம் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை. இன்னும், அவன் தன்னைத் தானே பாதுகாப்பவனாகவும் இருக்கவில்லை.
18:44 அந்நேரத்தில் உதவி (நட்பு, அதிகாரம் அனைத்தும்) உண்மையான அல்லாஹ்விற்கே உரியது. அவன் நன்மையாலும் சிறந்தவன், முடிவாலும் சிறந்தவன் ஆவான்.
18:45 மேலும், (நபியே!) அவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மை மழை நீரைப் போன்றது என்று விவரிப்பீராக! (அதாவது,) அதை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். பூமியின் தாவரம் அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது மாறி விட்டது. (இது போன்றுதான் இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) மேலும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.