உமர் ஷரீஃப் — 292
17:97 அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று திரட்டுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு அதிகப்படுத்துவோம்.
17:98 இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். இன்னும், “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், (மண்ணோடு மண்ணாக) மக்கியவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்.
17:99 நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் ஏற்காமல் நிராகரிக்கவே செய்தார்கள்!
17:100 (நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் (உங்களுக்கு) சொந்தமாக்கியவர்களாக இருந்திருந்தால், அப்போது (செல்வத்தை) தர்மம் செய்ய பயந்து (அதை) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கிறான்.
17:101 மேலும், திட்டவட்டமாக, நாம் மூஸாவிற்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆக, (நபியே) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக, அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன? என்று). ஆக, ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியக்காரராக கருதுகிறேன்” என்று கூறினான்.
17:102 (மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக கருதுகிறேன்”
17:103 ஆக, (மூஸா இன்னும் அவரை நம்பிக்கை கொண்ட) இவர்களை (ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து விரட்டிவிடுவதற்கு நாடினான். ஆகவே, அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
17:104 இன்னும், இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக நாம் கொண்டு வருவோம்.