>

உமர் ஷரீஃப் — 276

16:80 அல்லாஹ் உங்கள் வீடுகளில் உங்களுக்கு (வசதியான) தங்குதலை அமைத்தான். இன்னும், கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்கு கூடாரங்களை அமைத்தான். அவற்றை நீங்கள் பயண நாளிலும், நீங்கள் தங்குகின்ற நாளிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்கிறீர்கள். அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளிகள், (ஒட்டகத்தின்) உரோமங்கள் (வெள்ளாட்டின்) முடிகள் ஆகியவற்றிலிருந்து (தேவையான ஆடைகளையும் பல வகையான) பொருள்களையும் (அவற்றின் வியாபாரத்தினால் அதிகமான செல்வத்தையும், உங்கள் மரணம் சமீபிக்கும்) ஒரு காலம் வரை சுகமான பயன்பாட்டையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.

16:81 இன்னும், அல்லாஹ், தான் படைத்திருப்பவற்றில் உங்களுக்கு நிழல்களை அமைத்தான். இன்னும், மலைகளில் உங்களுக்கு குகைகளை அமைத்தான். இன்னும், வெப்பத்திலிருந்து(ம் குளிரிலிருந்தும்) உங்களை பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும், உங்கள் (எதிரிகளின்) பலமான தாக்குதலை விட்டும் உங்களை பாதுகாக்கக்கூடிய (இரும்பினால் ஆன உருக்கு) சட்டைகளையும் ஏற்படுத்தினான். இவ்வாறுதான், அவன் தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்குகிறான், நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பதற்காக!

16:82 ஆக, (நபியே!) அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகினால் (கவலைப்படாதீர்.) உம் மீது கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.

16:83 அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகிறார்கள். பிறகு, அதை நிராகரிக்கிறார்கள். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி கெட்டவர்கள்.

16:84 அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (எதுவும் பேச) அனுமதிக்கப்படாது. இன்னும், அவர்கள் (தங்கள் பாவங்களுக்கு) சாக்குபோக்கு சொல்ல (-மன்னிப்பு கேட்க) வைக்கப்பட மாட்டார்கள்.

16:85 தீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) தண்டனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (தண்டனை) இலகுவாக்கப்படாது. இன்னும், அவர்கள் (சிறிது நேரம் தண்டனை இன்றி இருக்க) அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்.

16:86 இணைவைத்தவர்கள் (அல்லாஹ்விற்கு இணை வைத்து வணங்கிய) தங்களுடைய (கற்பனை) தெய்வங்களை (மறுமையில்) பார்த்தால் (அல்லாஹ்வை நோக்கி), “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்” என்று கூறுவார்கள். ஆனால், அவைகளோ இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடும்.

16:87 இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்விற்கு முன் முற்றிலும் பணிந்து விடுவார்கள். மேலும், (தெய்வங்கள் என்று) இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை இவர்களை விட்டும் மறைந்து விடும்.