>

உமர் ஷரீஃப் — 257

14:11 அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நாங்கள் இல்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது (தனது வஹ்யை இறக்கி) அருள் புரிகிறான். மேலும், அல்லாஹ்வுடைய அனுமதியினாலே தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்தை நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது. இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.”

14:12 “இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன்தான் எங்களுக்கு எங்கள் (சரியான) பாதைகளில் நேர்வழி நடத்தினான். மேலும், நீங்கள் எங்களை துன்புறுத்துவதை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”

14:13 மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான்.

14:14 “இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.”

14:15 இன்னும், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் (இறுதியில்) அழிந்து விட்டனர்.

14:16 அவனுக்கு முன்னால் (அவன் மரணித்துவிட்டால்) ஜஹன்னம் (-நரகம்) இருக்கும். இன்னும், சீழ் நீரிலிருந்து அவன் நீர் புகட்டப்படுவான்.

14:17 அதை அவன் மிடறு மிடறாக குடிப்பான். அதை இலகுவாக அவன் குடித்து விடமாட்டான். மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் அவனுக்கு வரும். ஆனால், அவன் இறந்து விடமாட்டான். இன்னும், அவனுக்கு முன்னால் (கடினமான) தண்டனை (அவனை காத்து கொண்டு) இருக்கிறது.

14:18 தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றன! தாங்கள் செய்ததில் (இருந்து நன்மை) எதையும் (அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும்.