உமர் ஷரீஃப் — 250
13:6 இன்னும், (நபியே!) உம்மிடம் நல்லதற்கு முன்னர் கெட்டதை கேட்டு அவசரப்படுத்துகிறார்கள். மேலும், தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) வந்து சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன், மக்களை - அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும் மன்னிப்பவனாக இருக்கிறான் (அவர்கள் திருந்தி நேர்வழியில் வந்தால்). மேலும், நிச்சயமாக உம் இறைவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
13:7 (நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி), “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறபடி) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். மேலும், எல்லா மக்களுக்கும் (அவர்களை நன்மையின் பக்கம்; அல்லது தீமையின் பக்கம் வழி நடத்துகின்ற) ஒரு தலைவர் இருந்திருக்கிறார்.
13:8 ஒவ்வொரு பெண்ணும் (வயிற்றில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (குழந்தைகளை ஈன்றெடுக்கும் காலங்கள்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் நன்கறிவான். இன்னும், (இவை அல்லாத) எல்லா காரியங்களும் அவனிடம் (நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவின்படி நடக்கின்றன.
13:9 (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.
13:10 உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும்; அதை பகிரங்கப்படுத்தியவனும்; இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்பவனாக இருந்துவிட்டு, மேலும், பகலில் (நல்லவனாக) வெளியே வருபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமானவர்களே! (அவன் அவர்கள் அனவைரையும் அவர்களின் எல்லா செயல்களையும் நன்கறிவான்.)
13:11 (மனிதனாகிய) அவனுக்கு முன்புறத்திலிருந்தும், அவனுக்குப் பின்புறத்திலிருந்தும் (அவனை பாதுகாப்பதற்காக) பின்தொடரக்கூடியவர்கள் (-ஒரு கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம் என்று மாறி மாறி வரக்கூடிய வானவர்கள் அவனுடன்) இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து (அல்லாஹ் நாடிய காலம் வரை) அவனை பாதுகாக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்ற வரை. மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; இன்னும், அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை.
13:12 அவன் உங்க(ளில் பயணத்தில் இருப்பவர்க)ளுக்கு மின்னலை பயமாகவும் (ஊரில் இருப்பவர்களுக்கு மழை வருவதற்குரிய) ஆசையாகவும் காட்டுகிறான். இன்னும், (மழையைச் சுமந்து வரக்கூடிய) கனமான மேகங்களை உருவாக்குகிறான்.
13:13 மேலும், இடியும் வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவனே அபாயங்களை (-எரித்து சாம்பலாக்கிவிடும் இடி மின்னல்களை) அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேரறுக்கிறான். அவனோ (பாவிகளை) பிடிப்பதில் (-தண்டிப்பதால்) மிகக் கடுமையானவன்.