உமர் ஷரீஃப் — 242
12:53 “நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்).
12:54 “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்.
12:55 “நாட்டின் கஜானாக்கள் மீது (பொறுப்பாளராக, அவற்றை நிர்வகிப்பவராக) என்னை ஆக்குவீராக. நிச்சயமாக நான் (செல்வத்தை) நன்கு பாதுகாப்பவன், (நிர்வாகத்தை) நன்கறிந்தவன்” என்று (யூஸுஃப்) கூறினார்.
12:56 இவ்வாறே, யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம். அவர், தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகிறோம். இன்னும், நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
12:57 நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மிக மேலானதாகும்.
12:58 இன்னும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (எகிப்துக்கு) வந்தார்கள். மேலும், அவரிடம் நுழைந்தார்கள். ஆக, அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
12:59 மேலும், அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு (யூஸுஃப்) தயார் செய்து கொடுத்தபோது, “(மறுமுறை நீங்கள் வரும்போது) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு தேவையானதை) முழுமையாக அளந்து கொடுப்பதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறினார்.
12:60 “ஆனால், நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு ஏதும்) அளந்து கொடுக்கப்படாது. இன்னும், எனக்கு அருகிலும் வராதீர்கள்” என்று (யூஸுஃப்) கூறினார்.
12:61 “நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை வலியுறுத்தி கேட்போம். இன்னும், நிச்சயமாக நாங்கள் (நீர் கூறியதை) செய்து முடிப்போம்” என்று (யூஸுஃபின் சகோதரர்கள்) கூறினார்கள்.
12:62 மேலும், (யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பி சென்றால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும்” என்று கூறினார்.
12:63 ஆக, அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட அதிகமான உணவு) அளவை எங்களுக்கு (கொடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (அதிக தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்” என்று கூறினார்கள்.