உமர் ஷரீஃப் — 194
9:41 நீங்கள் இலகுவானவர்களாக[1] இருக்கும் நிலையிலும்; இன்னும், கனமானவர்களாக[2] இருக்கும் நிலையிலும் போருக்கு புறப்படுங்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் (உபதேசங்களை) அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
9:42 (நபியே!) அருகில் உள்ள பொருளாகவும் சமீபமான பயணமாகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றி இருப்பார்கள். எனினும், (செல்ல வேண்டிய) எல்லை அவர்களுக்கு தூரமாக இருக்கிறது. இன்னும், “நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால் உங்களுடன் வெளியேறி இருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்கிறார்கள். (பொய் சத்தியத்தால் அவர்கள்) தங்களையே அழித்துக் கொள்கிறார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிவான்.
9:43 அல்லாஹ் உம்மை மன்னிப்பான்! (அவர்களில்) உண்மை உரைத்தவர்கள் (எவர்கள் என்று) உமக்குத் தெளிவாகின்ற வரை; இன்னும், பொய்யர்களை(யும் அவர்கள் யாரென்று) நீர் அறிகின்ற வரை ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?
9:44 அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் (அல்லாஹ்வின் பாதையில்) போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். இன்னும், அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களை நன்கறிந்தவன் ஆவான்.
9:45 உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகித்தன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்தில் தடுமாறுகிறார்கள்.
9:46 இன்னும், அவர்கள் (போருக்காக தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறி செல்வதை நாடியிருந்தால் அதற்கு ஒரு (முறையான) தயாரிப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். எனினும், (உம்முடன்) அவர்கள் கிளம்பிவருவதை அல்லாஹ் வெறுத்தான். ஆகவே, (அல்லாஹ்) அவர்களைத் தடுத்து விட்டான். இன்னும், தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
9:47 அவர்கள் உங்களுடன் (போருக்கு) வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; இன்னும், உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்(து விஷமத்தனமான வேலை செய்)திருப்பார்கள். இன்னும், அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். இன்னும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.