>

உமர் ஷரீஃப் — 193

9:37 (புனித மாதங்களை அவற்றின் காலத்திலிருந்து) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகிறார்கள். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகிறார்கள். இன்னும், (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்து கொள்கிறார்கள். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அவர்களுடைய தீயச் செயல்கள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.

9:38 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை!

9:39 (போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

9:40 நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில் நிராகரித்தவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன் தோழரை நோக்கி, “நீ கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். ஆக, அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். இன்னும், நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.