>

உமர் ஷரீஃப் — 118

5:58 இன்னும், நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்பதாகும்.

5:59 (நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்.’’

5:60 (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விடம் தண்டனையால் இதைவிட மிகக் கெட்டவனை நான் உங்களுக்கு அறிவிக்கவா? எவர்களை அல்லாஹ் சபித்தானோ; இன்னும், எவர்கள் மீது கோபித்தானோ; இன்னும், எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ; இன்னும், எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்கள்தான் தகுதியால் மிகக் கெட்டவர்கள்; இன்னும், நேரான பாதையிலிருந்து மிகவும் வழிதவறியவர்கள் ஆவார்கள்.’’

5:61 இன்னும் அவர்கள் உங்களிடம் வந்தால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். (எனினும் அவர்கள் உங்களிடம்) நிராகரிப்புடன்தான் திட்டமாக நுழைந்தார்கள். திட்டமாக அதனுடன்தான் வெளியேறினார்கள். இன்னும், அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

5:62 (நபியே!) அவர்களில் அதிகமானவர்கள் பாவத்திலும், அநியாயத்திலும், தவறான செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக இருப்பதை நீர் காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!

5:63 அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை (-மக்களின் செல்வங்களை தவறான முறையில்) விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!

5:64 “அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான்.