உமர் ஷரீஃப் — 106
4:176 (நபியே!) அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! கலாலா (-தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். பிள்ளை சந்ததி இல்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன் அவளுடைய அனைத்து சொத்திற்கும்) அவளுக்கு வாரிசாக ஆகிவிடுவான். ஆக, (பிள்ளை இல்லாமல் இறந்தவருக்கு உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக (அல்லது அதை விட அதிகமாக) இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் (பல சகோதர சகோதரிகள்) இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு (என்ற அடிப்படையில் சொத்து அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படும்). நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு (நீதமான சரியான சட்டங்களை) விவரிக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். (ஆகவே, அவனது சட்டத்தை ஏற்று திருப்தி பெறுங்கள்!)
5:1 நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான்.
5:2 நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.