>

உமர் ஷரீஃப் — 88

4:60 (நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று வெளி பாசாங்கு செய்பவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்பு கேட்டுச் செல்ல நாடுகிறார்கள். அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.

4:61 இன்னும், “(நீதமான தீர்ப்பை நாடி) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)’’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை - அவர்கள் உம்மை முற்றிலும் புறக்கணித்து விலகி செல்வதையே - நீர் காண்பீர்.

4:62 ஆக, (நபியே! தீமைகளில்) அவர்களின் கரங்கள் முன்னர் செய்தவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு சிரமம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேட முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பிறகு, “(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் நாடியே அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை’’ என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர்களாக உம்மிடம் வருகிறார்கள்.

4:63 இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும் அவர்களுக்கு உபதேசிப்பீராக! இன்னும், அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சொல்லை அவர்களுக்கு சொல்வீராக!

4:64 நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், இன்னும், அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம் அவர்களுக்காக) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்.

4:65 ஆக, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் அவர்கள் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் அறவே அதிருப்தி காணாமல் (-சங்கடத்தை உணராமல்) முழுமையாக (உமது தீர்ப்புக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.