>

உமர் ஷரீஃப் — 85

4:38 இன்னும், அவர்கள் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன் ஆவான்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் மிகக் கெட்ட நண்பனாக இருக்கிறான்.

4:39 அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

4:40 நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். இன்னும், (அவர்கள் செய்தது) நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். இன்னும், தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.

4:41 ஆக, (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால், இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

4:42 (அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.

4:43 நம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுற்றவர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை தெளிவாக அறிகின்ற (சுதாரிப்பு நிலைக்கு நீங்கள் வருகின்ற) வரை தொழுகையை நெருங்காதீர்கள். இன்னும், (நீங்கள் பெருந்தொடக்குள்ள) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர்கள்). (ஆனால்) நீங்கள் பயணிகளாக இருந்தால் தவிர. இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்து வந்தால்; அல்லது, மனைவிகளோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.

4:44 (நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வுடைய) பாதையிலிருந்து வழிதவறுவதை விரும்புகிறார்கள்.