உமர் ஷரீஃப் — 77
4:1 மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். இன்னும், அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் (இவ்வுலகத்தின் பல பாகங்களில்) பரப்பினான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் மூலமாகவே உங்களுக்குள் (தேவைகளை ஒருவர் மற்றவரிடம்) கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும், இரத்த உறவுகளை முறிப்பதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.
4:2 இன்னும், அனாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுத்துவிடுங்கள். இன்னும், (அதிலுள்ள) உயர்ந்ததை (நீங்கள்) எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக (உங்களிடமுள்ள) மட்டமானதை (அவர்களுக்கு) கொடுக்காதீர்கள். இன்னும், அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.
4:3 இன்னும், அனாதை(ப் பெண்களை திருமணம் செய்து, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக; அல்லது, மும்மூன்றாக: அல்லது, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை மட்டும் மணம் புரியுங்கள். அல்லது, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
4:4 இன்னும், பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கட்டாயக் கடமையாக (மனமுவந்து மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) அவர்கள் மனம் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக (அவர்கள் விட்டுக் கொடுத்த) அதை புசியுங்கள்.
4:5 இன்னும், (அனாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் (அனாதைகளின்) செல்வங்களை (அவர்களில் யார்) புத்தி குறைவானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் கொடுக்காதீர்கள். இன்னும், அவற்றில் அவர்களுக்கு நீங்களே உணவளியுங்கள். இன்னும், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள். இன்னும், (அவர்கள் தங்கள் செல்வத்தை கேட்டால் செல்வத்தை நிர்வகிக்கும் அறிவுத் திறமை உங்களுக்கு வந்தவுடன் உங்கள் செல்வத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று) நல்ல சொல்லை அவர்களுக்குச் சொல்லுங்கள்!
4:6 இன்னும், அனாதைக(ளிடம் அவர்களின் செல்வங்களை கொடுப்பதற்கு முன்னர் அவர்க)ளைச் சோதியுங்கள், இறுதியாக, அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவுத் திறமையையும் அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் அவற்றை சாப்பிடாதீர்கள் (அனுபவித்து அழித்துவிடாதீர்கள்). (அனாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அனாதையின் செல்வத்திலிருந்து தான் பயனடைவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அவசியத்திற்கேற்ப அதிலிருந்து) புசிக்கவும். ஆக, அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் (அப்போது) அவர்களுக்கு முன்னர் சாட்சிகளை வையுங்கள். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.