>

உமர் ஷரீஃப் — 71

3:158 இன்னும் நீங்கள் இறந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் திட்டமாக அல்லாஹ்விடமே (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள்.

3:159 ஆக, (நபியே!) நீர் அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானவராக ஆகிவிட்டீர். இன்னும், நீர் கடுகடுப்பானவராகவோ, உள்ளம் கடுமையானவராகவோ இருந்திருந்தால் உமது சுற்றுப்புறத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! இன்னும், காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! ஆக, நீர் (ஒரு முடிவை) உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வை(த்து தன்னை சார்ந்து இரு)ப்பவர்கள் மீது அன்பு வைக்கிறான்.

3:160 அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக!

3:161 மோசடி செய்வது ஒரு நபிக்கு அழகல்ல. எவர் மோசடி செய்வாரோ அவர், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவார். பிறகு, ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் அது செய்ததை முழுமையாக (கணக்கிட்டு கூலி) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.

3:162 ஆக, யார் (நேர்மையாக நடப்பதில்) அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினாரோ அவர், யார் (மோசடி செய்து) அல்லாஹ்வின் கோபத்தை சுமந்தாரோ, இன்னும் அவருடைய தங்குமிடம் நரகமாக ஆகிவிட்டதோ அவரைப் போன்று ஆகுவாரா? அ(ந்த நரகமான)து மிக கெட்ட மீளுமிடமாகும்.

3:163 அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல தரங்கள் (உடையோர்) ஆவர். அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.

3:164 நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான் - அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பியபோது. அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; இன்னும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்.

3:165 (நிராகரிப்பாளர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டபோது (‘பத்ர்’ போரில் அவர்களுக்கு) அது போன்று இருமடங்கை நீங்கள் கொடுத்திருக்க, “இ(ந்த சோதனையான)து எங்கிருந்து வந்தது” என்று கூறுகிறீர்களா? (நபியே!) கூறுவீராக: “உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. (அதற்கு காரணம் நீங்கள்தான்.)” நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.