>

உமர் ஷரீஃப் — 604

112:1 (நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்.

112:2 அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).

112:3 (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)

112:4 இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை.

113:1 (நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,

113:2 அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்.

113:3 இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,

113:4 இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,

113:5 பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

114:1 (நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

114:2 மக்களின் அரசன்,

114:3 மக்களின் வணக்கத்திற்குரியவன்,

114:4 வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

114:5 அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.

114:6 (குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.