>

உமர் ஷரீஃப் — 6

2:30 இன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.”

2:31 இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.

2:32 அவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”

2:33 அவன் கூறினான்: “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, அவன் கூறினான்: “வானங்கள் இன்னும் பூமியில் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன். இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?”

2:34 இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்.

2:35 இன்னும், நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள். (அப்படி நெருங்கினால்) அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்.”

2:36 ஆக, ஷைத்தான் அவ்விருவரையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) மாறு செய்ய தூண்டி அதிலிருந்து அகற்றினான். ஆக, அவ்விருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான். இன்னும், நாம் கூறினோம்: “நீங்கள் இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவீர்கள். இன்னும், உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு.”

2:37 ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் தேட சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். (அவற்றைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்.) ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.