>

உமர் ஷரீஃப் — 593

88:23 எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,

88:24 ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான்.

88:25 நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.

88:26 பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)

89:1 விடியற் காலையின் மீது சத்தியமாக!

89:2 பத்து இரவுகள் மீது சத்தியமாக!

89:3 இரட்டைப்படை மீது சத்தியமாக! ஒற்றைப்படை மீது சத்தியமாக!

89:4 இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (மறுமை வந்தே தீரும்).

89:5 இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?

89:6 ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா?

89:7 (உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்).

89:8 அவர்கள் போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை.

89:9 இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்துடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)

89:10 இன்னும், பெரும் ஆணிகளுடைய ஃபிர்அவ்னுடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)

89:11 அவர்கள் நகரங்களில் (பாவம் செய்வதில்) எல்லை மீறினார்கள்.

89:12 ஆக, அவர்கள் அவற்றில் விஷமத்தை (-மக்கள் மீது அநீதி செய்வதை) அதிகப்படுத்தினர்.

89:13 ஆகவே, உம் இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான்.

89:14 நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.

89:15 ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’’ எனக் கூறுகிறான்.

89:16 ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’’ எனக் கூறுகிறான்.

89:17 அவ்வாறல்ல! மாறாக, நீங்கள் அனாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அனாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை).

89:18 இன்னும், ஏழையின் உணவுக்கு (நீங்கள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை.

89:19 இன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் உடைய செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)

89:20 இன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள்.

89:21 அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

89:22 இன்னும், உம் இறைவன் வருவான், மலக்குகளோ அணி அணியாக நிற்கும் நிலையில்.