>

உமர் ஷரீஃப் — 577

74:48 ஆக, பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை (இப்போது) அவர்களுக்கு பலனளிக்காது.

74:49 ஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?

74:50 தப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்,

74:51 அவை வேட்டையாடுகிற, பாய்ந்து வருகிற சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன.

74:52 மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட (வேத) ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகிறார்கள்.

74:53 அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)

74:54 அவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.

74:55 ஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்.

74:56 அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (நமது) அச்சத்திற்கும் மன்னிப்புக்கும் மிகத் தகுதியானவன்.

75:1 மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!

75:2 இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!

75:3 மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?

75:4 ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குலம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்.

75:5 மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.

75:6 மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.

75:7 ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,

75:8 இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,

75:9 இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,

75:10 அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”

75:11 அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது).

75:12 அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.

75:13 மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்.

75:14 மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)

75:15 அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).

75:16 (நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்.

75:17 நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்.

75:18 ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்பீராக!)

75:19 பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்.