>

உமர் ஷரீஃப் — 521

51:7 அழகிய தோற்றமுடைய (நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை உடைய) வானத்தின் மீது சத்தியமாக!

51:8 நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கிறீர்கள்.

51:9 திருப்பப்படுபவர் இ(ந்த தூதரை விட்டும் இந்த வேதத்)தை விட்டும் திருப்பப்படுகிறார்.

51:10 பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.

51:11 அவர்கள் (சுகபோக வாழ்க்கையின்) மயக்கத்தில் மறதியாளர்களாக (மறுமையை அலட்சியம் செய்தவர்களாக) இருக்கிறார்கள்.

51:12 “கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும்” என்று அவர்கள் (கேலியாக) கேட்கிறார்கள்.

51:13 அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு தண்டனை செய்யப்படுகின்ற நாளில்,

51:14 உங்கள் தண்டனையை சுவையுங்கள்! இது(தான்), நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும் (என்று கூறப்படும்).

51:15 நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில்; இன்னும், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.

51:16 அவர்களின் இறைவன் அவர்களுக்கு கொடுத்ததை (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லறம் புரிபவர்களாக இருந்தார்கள்.

51:17 அவர்கள் இரவில் (அல்லாஹ்வை வணங்குவதில் அதிக நேரம் கழிப்பார்கள். ஆகவே,) மிகக் குறைவாகவே தூங்குகிறவர்களாக இருந்தார்கள்.

51:18 இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள்.

51:19 இன்னும், யாசிப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.

51:20 உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு (அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்துகின்ற) பல அத்தாட்சிகள் பூமியில் உள்ளன.

51:21 இன்னும் (மனிதர்களே!) உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா?

51:22 இன்னும் உங்கள் உணவும் (-உங்கள் வாழ்வாதாரத்தின் மூலமாகிய மழையும் நன்மை, தீமையில்) எது உங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ அதுவும் வானத்தில்தான் (அல்லாஹ்விடம்) இருக்கிறது.

51:23 ஆக, வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நீங்கள் (உங்கள் வாய்களால்) பேசுவது (என்பது கண்கூடாக பார்க்கப்படும் உண்மையாக இருப்பது) போன்றே நிச்சயமாக (உங்கள் இறைவன் கூறுகிற) இதுவும் உண்மைதான்.

51:24 இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

51:25 அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது, “ஸலாம்” கூறினார்கள். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்!” (என்று கூறி, சற்று தாமதித்துவிட்டு நீங்கள் என்னிடம்) “அறியப்படாத மக்கள்” என்று கூறினார்.

51:26 ஆக, தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்.

51:27 ஆக, அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி வைத்தார். (அவர்கள் சாப்பிடாமல் இருக்கவே, அவர்களை நோக்கி) நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.

51:28 (ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்!” இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.

51:29 ஆக, (இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சத்தத்தோடு முன்னோக்கி வந்தார். ஆக, தனது முகத்தை அறைந்தார். இன்னும், “(நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே” என்று கூறினாள்.

51:30 “அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான். நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன்” என்று (நபி இப்ராஹீமின் மனைவிக்கு வானவர்கள் பதில்) கூறினார்கள்.