உமர் ஷரீஃப் — 451
37:127 ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) கொண்டுவரப்படுவார்கள்.
37:128 (எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்).
37:129 இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்.
37:130 இல்யாஸுக்கு(ம் அவரது மக்களில் அவரை பின்பற்றியவர்களுக்கும்) ஸலாம் உண்டாகட்டும்.
37:131 நிச்சயமாக நல்லவர்களுக்கு நாம் இப்படித்தான் கூலி கொடுப்போம்.
37:132 நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
37:133 நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
37:134 அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூர்வீராக!
37:135 (தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர.
37:136 (அவரையும் முஃமின்களையும் பாதுகாத்த) பிறகு, மற்றவர்களை நாம் அழித்தோம்.
37:137 இன்னும், நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
37:138 இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?
37:139 நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.
37:140 (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!
37:141 ஆக, (அவர் சென்ற கப்பல் நின்றுவிடவே) அவர் சீட்டு குலுக்கிப் போட்டார். ஆக, குலுக்கலில் பெயர் எடுக்கப்பட்டவர்களில் அவர் ஆகிவிட்டார். (அவரது பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது.)
37:142 ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார்.
37:143 ஆக, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை அதிகம் (தொழுது) துதிப்பவர்களில் இருந்திருக்கவில்லை என்றால்,
37:144 அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.
37:145 ஆக, (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
37:146 இன்னும், அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
37:147 இன்னும், ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
37:148 ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.
37:149 ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) விளக்கம் கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
37:150 வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம், அவர்கள் (அதை) பார்த்துக் கொண்டு (அங்கு ஆஜராகி) இருந்தார்களா?
37:151 அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்யில் ஒன்றாக கூறுகிறார்கள்:
37:152 “அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” என்று. நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.
37:153 ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் (தனக்கு) தேர்தெடுத்துக் கொண்டானா?