உமர் ஷரீஃப் — 45
2:265 இன்னும், எவர்கள் தங்களது செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அ(ந்த தோட்டத்)தை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. ஆக, அதை அடைமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் அதை அடைவது போதும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
2:266 உங்களில் ஒருவர் - அவருக்கு பேரீச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. இயலாத பலவீனமான குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். ஆக, (இந்த நிலையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அதை அடைந்து, அதுவோ எரித்து (சாம்பலாகி) விடுவதை - விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.
2:267 நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து உற்பத்தி செய்து கொடுத்ததிலும் உள்ள நல்ல பொருள்களில் இருந்து தர்மம் செய்யுங்கள். அதிலிருந்து கெட்டதை தர்மம் செய்ய நாடாதீர்கள். (கெட்டது, உங்களுக்குக் கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்களாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்.
2:268 ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.
2:269 அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு அறிவு ஞானத்தை தருகிறான். எவர் அறிவு ஞானம் தரப்படுகிறாரோ திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். நிறைவான அறிவுடையவர்கள் தவிர (யாரும்) உபதேசம் பெறமாட்டார்.