>

உமர் ஷரீஃப் — 42

2:253 அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் எவருடன் பேசினானோ அ(த்தகைய)வரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், (ஜிப்ரீல் என்ற) பரிசுத்த ஆத்மாவின் மூலம் அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.

2:254 நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

2:255 அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்.

2:256 இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.