>

உமர் ஷரீஃப் — 404

29:64 இவ்வுலக வாழ்க்கை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தவிர இல்லை. நிச்சயமாக மறுமை வீடு - அதுதான் நிரந்தரமான (வாழ்க்கையை உடைய)தாகும். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

29:65 ஆக, அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை - அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள். ஆக, அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு சிலைகளை) இணையாக்குகிறார்கள்.

29:66 ஏனெனில், (நமது அருட்கொடைகளில்) நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை அவர்கள் நிராகரிப்பதற்காகவும் (பாவங்களைக் கொண்டு) அவர்கள் இன்புறுவதற்காகவும் (அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகிறார்கள்). ஆக, அவர்கள் (விரைவில் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்.

29:67 “பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை நிச்சயமாக நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம்; அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளையால்) சூறையாடப்படுகிறார்கள்” என்பதை (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா? ஆக, அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? இன்னும், (உண்மையாளனாகிய) அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?

29:68 அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட; அல்லது, உண்மையை - அது தன்னிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?

29:69 எவர்கள் நமக்காக (நமது தீன் உயர்வதற்காக இணைவைப்பாளர்களிடம்) போரிட்டார்களோ - அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது (நேரான) பாதைகளை வழிகாட்டுவோம். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோருடன் இருக்கிறான்.

30:1 அலிஃப் லாம் மீம்.

30:2 ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்,

30:3 (அவர்கள் தோற்கடிக்கப்பட்டது ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப் பகுதியில். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை வெற்றிகொண்டு) தோற்கடிப்பார்கள்.

30:4 சில ஆண்டுகளில் இது நடைபெறும். (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) இன்னும், அந்நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

30:5 (அந்த மகிழ்ச்சி) அல்லாஹ்வின் உதவியினால் ஆகும். அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன், மகா கருணையாளன்.