உமர் ஷரீஃப் — 369
26:40 “சூனியக்காரர்களை நாம் பின்பற்றலாம், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால்”
26:41 ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு கூலி உண்டா?”
26:42 அவன் கூறினான்: “ஆம். (கூலி உண்டு)! இன்னும், நிச்சயமாக (உங்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டு) நீங்கள் அப்போது (எனக்கு) மிக நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.”
26:43 அவர்களுக்கு மூஸா கூறினார்: “நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.”
26:44 ஆக, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள்தான் வெற்றியாளர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.
26:45 ஆக, மூஸா தனது தடியை எறிந்தார். ஆக, அது உடனே அவர்கள் பொய்யாக வித்தை காட்டிய அனைத்தையும் விழுங்கியது.
26:46 உடனே, சூனியக்காரர்கள் (நம்பிக்கை கொண்டு) சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்.
26:47 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.”
26:48 “மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”
26:49 (ஃபிர்அவ்ன்) கூறினான்: “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் பெரிய (தலை)வர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும்போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை, உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், உங்கள் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றுவேன்.”
26:50 அவர்கள் கூறினார்கள்: “பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்.”
26:51 “நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருப்பதால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் மிகவும் ஆசைப்படுகிறோம்.”
26:52 இன்னும், நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், அதாவது “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”
26:53 ஆக, (இஸ்ரவேலர்களை தடுப்பதற்காக) ஃபிர்அவ்ன் நகரங்களில் (தனது படைகளை) ஒன்று திரட்டி கொண்டு வருபவர்களை அனுப்பி வைத்தான்.
26:54 “நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”
26:55 “இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகிறார்கள்.”
26:56 “இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் உஷார் நிலையில் இருக்கிறோம்.” (இவ்வாறு, ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)
26:57 ஆக, நாம் அவர்களை தோட்டங்கள் இன்னும் ஊற்றுகளில் இருந்து வெளியேற்றினோம்.
26:58 இன்னும், பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).
26:59 இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும், அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்.
26:60 ஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.