உமர் ஷரீஃப் — 367
26:1 தா, சீம், மீம்.
26:2 இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:3 (நபியே!) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மை நீர் அழித்துக் கொள்வீரோ!
26:4 நாம் நாடினால் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு அத்தாட்சியை இறக்குவோம். ஆக, அவர்களது கழுத்துகள் அதற்கு பணிந்தவையாக ஆகிவிடும்.
26:5 ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
26:6 ஆக, திட்டமாக இவர்கள் (நமது தூதரையும் அவர் கொண்டு வந்ததையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தனரோ அதன் (நிகழ்வதுடைய) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.
26:7 பூமியை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? “அதில் நாம் எத்தனை அழகிய தாவர ஜோடிகளை முளைக்க வைத்திருக்கிறோம்” என்று.
26:8 நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
26:9 இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
26:10 அந்நேரத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூஸாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! என்று கூறினான்.
26:11 ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச வேண்டாமா!
26:12 (மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”
26:13 “இன்னும், என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; என் நாவு பேசாமல் ஆகிவிடும். ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி) வஹ்யி அனுப்புவாயாக!”
26:14 இன்னும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.
26:15 (அல்லாஹ்) கூறினான்: “அவ்வாறல்ல! ஆக, நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளை (அவர்களிடம்) கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்.
26:16 ஆக, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! இன்னும், “நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்” என்று (அவனிடம்) கூறுங்கள்!
26:17 நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு!
26:18 (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை (நீ) குழந்தையாக (இருந்தபோது) எங்களிடம் வளர்க்கவில்லையா? இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா)!”
26:19 “இன்னும், (மூஸாவே!) நீ உனது (ஒரு கெட்ட) செயலை செய்து விட்டாய். நீ நன்றி கெட்டவர்களில் ஒருவராக இருக்கிறாயே.”